சீனாவில் கடந்த ஜூன் மாதம் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. இந்த நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
புதுடெல்லி: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் கொரோனா தொற்று பரவியது.
இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர் உயிரிழந்தனர்.
கொரோனா பரவலை தடுக்க உடனடியாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகின் பல நாடுகளில் நடந்து வந்தது. இந்தியாவிலும் மருந்தை கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
முதலில் ரஷ்யா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தது. அதை தொடர்ந்து அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கின.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்த மருந்தை தயாரிக்க முன் வந்தது. அந்த மருந்துக்கு ‘கோவிஷீல்டு’ என்று பெயர் சூட்டப்பட்டது.
அதே நேரத்தில் புனேவில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வைராலஜி ஆய்வு நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து புதிய தடுப்பூசி மருந்தை உருவாக்கின. இதை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற பெயரில் தயாரித்தது.
தடுப்பூசி மருந்துகளை மனிதர்களுக்கு 3 கட்டமாக செலுத்தி சோதனை நடத்தியதற்கு பிறகே அனுமதிப்பது வழக்கம். அதன்படி 2 மருந்துகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவை வெற்றிகரமாக செயல்பட்டன.
இதைதொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி கோவிஷீல்டுக்கும், 3-ந்தேதி கோவேக்சினுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரு தடுப்பூசிகளையும் மக்களுக்கு போடும் பணி ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. முதலாவதாக சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 3 கோடி சுகாதார ஊழியர்கள் ஊசி போட்டுக்கொண்டனர்.
இதன்பின்னர் பிப்ரவரி 2-ந்தேதி முன்கள பணியாளர்களுக்கு ஊசி போடப்பட்டது. மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்றைய நாளில் பிரதமர் நரேந்திரமோடி கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
அதன் பின்னர் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த தடுப்பூசிகளை குறிப்பிட்ட இடைவெளி விட்டு 2 முறை செலுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள 133 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற திட்டத்துடன் பணிகள் நடந்தன.
மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி போடப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லாததால் உடனடியாக எல்லோருக்கும் செலுத்த முடியவில்லை. படிப்படியாக ஊசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நேற்று வரை 99 கோடியே 85 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. அதில் முதல் டோஸ் ஊசியை 70 கோடியே 56 லட்சம் பேரும். 2-வது டோஸ் தடுப்பூசியை 29 கோடியே 28 லட்சம் பேரும் போட்டு இருந்தனர்.
இன்று காலை வழக்கம் போல முகாம் தொடங்கியது. ஏராளமானோர் வந்து தடுப்பூசி போட்டனர். இன்று காலை 9.40 மணி நிலவரப்படி தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 100 கோடி டோசை கடந்தது.
இதன்படி இந்தியாவில் 75 சதவீதம் மக்கள் ஒரு தடவையாவது தடுப்பூசி போட்டுள்ளனர். 31 சதவீதம் பேர் 2 தடுப்பூசியும் போட்டு இருக்கிறார்கள். ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கி 85 நாளில் 10 கோடி டோசை எட்டியது. அடுத்த 45 நாளில் 20 கோடியை எட்டியது. அடுத்த 29 நாளில் 30 கோடியை கடந்தது. அதன் பிறகு அடுத்த 24 நாளில் 40 கோடி ஆனது.
அதற்கடுத்த 20 நாளில் அதாவது ஆகஸ்டு 6-ந் தேதி 50 கோடி ஆனது. அடுத்த 76 நாட்களில் (இன்று) 100 கோடியை கடந்து இருக்கிறது. நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில்தான் அதிகம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை 12 கோடியே 21 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் 2-வது இடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது. 9 கோடியே 32 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கிறது. 3-வது இடம் பிடித்துள்ள மேற்கு வங்காளத்தில் 6 கோடியே 85 லட்சம். 4-வது இடம் பிடித்துள்ள குஜராத்தில் 6 கோடியே 76 லட்சம் டோஸ்களும், 5-வது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் 6 கோடியே 72 லட்சம் டோஸ்களும் போடப்பட்டுள்ளன.
சீனாவில் கடந்த ஜூன் மாதம் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. இந்த நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை. இப்போது இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பூசியை செலுத்தி பெரும் சாதனையை படைத்துள்ளது.
இதை கொண்டாடும் வகையில் மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்தன.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த பணி வெற்றிகரமாக அமைய உதவிபுரிந்த சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
டெல்லி செங்கோட்டை யில் நடந்த விழாவில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட பாடலை வெளியிட்டார். மேலும் இது சம்பந்தமான பட காட்சிகள் கொண்ட வீடியோவும் தயாரிக்கப்பட்டு இருந்தது. அதையும் அவர் வெளியிட்டார்.
‘வேக்சின் செஞ்சுரி’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனியாக கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்திருந்தது. விமானத்தில் பிரதமர், சுகாதார ஊழியர்களுடன் இருக்கும் படங்கள் வெளியிடப்பட்டு, ‘இந்தியா வெற்றி பெறும், கொரோனா வீழ்ச்சி அடையும்’ என்ற வாசகம் வைக்கப்பட்டு இருந்தது.
ஹரித்துவாரில் கேபிள் கார் நடத்தி வரும் உதான் கதோலா நிறுவனம் முதல் 100 பேரை இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தது. இதேபோல கேரள மாநிலத்தில் உள்ள மலம்புழா கேபிள் கார் நிறுவனமும் இலவச அனுமதியை வழங்கியது.
இந்தியாவில் இன்னும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. கோவேக்சின் மருந்தை 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட்டுக்கொள்ள இப்போது தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படும். அப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
அனைத்து மக்களுக்கும் தவறாமல் தடுப்பூசி போடும் திட்டத்தில் நாடு முழுவதும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளே போடப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி மருந்துக்கும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டும் இந்த ஊசி போடப்படுகிறது.
இதுதவிர அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அன் சான்சன் மற்றும் சைடுஸ்காடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இது தவிர கோர்பேவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய மருந்துகளுக்கு அனுமதி கேட்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிபிவி154, எச்ஜிசி019 ஆகிய மருந்துகளின் சோதனை நடந்து வருகிறது.
அனைத்து மருந்துகளுக்கும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மருந்து உற்பத்தி அதிகமாகி தடுப்பூசி போடுவதின் வேகம் இன்னும் அதிகரிக்கும். எனவே விரைவில் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இத்துடன் வாராந்திர சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நேற்று மாலை வரை 5 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரத்து 307 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
maalaimalar