பிரதமர் மோடி
புதுடெல்லி: கொரோனா போரை எதிர்கொள்ள ஆயுதமான முகக்கவசத்தை நாம் தொடர்ந்து அணிவதன் மூலம் அதை வெற்றி காண முடியும். அனைவரும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று வரலாற்று சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
நேற்று நாம் புதிய வரலாற்று சாதனையை படைத்து இருக்கிறோம். இந்தியா 257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை எட்டி இருக்கிறது. நாட்டு மக்களின் அனைவருடைய ஒத்துழைப்பு காரணமாகதான் 100 கோடி தடுப்பூசி என்பது சாத்தியமானது.
இது நாட்டு மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். மக்களின் ஒத்துழைப்புடன் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அதற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
100 கோடி டோஸ் தடுப்பூசி என்பது ஒரு புதிய சாதனையின் தொடக்கம். இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
உலக அளவில் தடுப்பூசி செலுத்த தொடங்கியபோது இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசியை எப்படி பெறுவார்கள். எப்படி செலுத்துவார்கள் என கேள்விகள் எழுப்பப்பட்டன.
இவ்வாறு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை பதில் அளித்துள்ளது.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை கொண்டு வந்து இந்த சாதனையை எட்டியுள்ளோம். தடுப்பூசிகள் செலுத்த தொடங்கியபோது முக்கிய நபர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை அரசு உறுதி செய்தது.
கொரோனா கால கட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இந்தியாவின் தடுப்பூசி திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது. உலக அளவில் கொரோனா மருந்து தயாரிப்பதில் இந்தியாவுக்கு சிறப்பு கிடைத்துள்ளது.
சிறப்பான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி 100 கோடியை எட்டி இருக்கிறது. கோவின் இணையதளம் தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் மிக எளிதாக கொண்டு சேர்த்தது.
கொரோனா தாக்கத்தால் துவண்டு விடாமல் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்தினோம். மோசமான சூழ்நிலை இருந்தாலும் அது நாட்டுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதினோம்.
நாம் விவசாயம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினோம்.
விளக்கு ஏற்றுவது, கை தட்டுவது போன்றவை எப்படி பலன் அளிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அது டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை வளர்த்துள்ளோம்.
நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நமது மக்களை பாதுகாத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
கொரோனா எனும் பெரும் துயரத்தை சந்தித்த நாம் எந்த துயரத்தையும் சந்திக்கும் வலிமையை பெற்றுள்ளோம்.
100 கோடி தடுப்பூசி செயல்படுத்தப்பட்டது புதிய இந்தியாவின் விடா முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி.
போர் காலத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்ள கவசம் அணிவார்கள். கொரோனாவை எதிர்கொள்வது ஒரு போர் போன்றதுதான். அதனால் தான் முக கவசம் அணிகிறோம். இது நமது உயிரை காப்பாற்றும்.
இனி விழாக்காலங்கள் வருகின்றன. கொரோனா போரை எதிர்கொள்ள ஆயுதமான முகக்கவசத்தை நாம் தொடர்ந்து அணிவதன் மூலம் அதை வெற்றி காண முடியும். எனவே அனைவரும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்.
இந்திய பொருட்களை வாங்குங்கள். இந்தியர்களாக இருங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
maalaimalar