கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 435 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் சுமார் 29 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 12-ந்தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டிய கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பம்பை உள்பட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இடுக்கி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
மழை வெள்ளத்துடன் அணை நீரும் சேர்ந்ததால் கேரளா முழுவதும் வெள்ளக்காடானது.
அதோடு கோட்டயம், இடுக்கி,கோழிக்கோடு மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் பாலக்காடு மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு மற்றும் தொடர் மழையால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. இன்னும் 4 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 435 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் சுமார் 29 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கிழக்கு மத்திய அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் சுழற்சி காரணமாக கேரளாவில் வருகிற 25-ந் தேதி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மலையோர மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
maalaimalar