சிறுவர்களுக்கு தடுப்பூசி பிப்ரவரி மாதம் கிடைக்கும்- சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் தகவல்

தடுப்பூசி

சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளும் பிரத்யேகமாக ‘கோவாவேக்ஸ்’ என்ற பெயரில் தயாரிக்க உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு நேற்று வரலாற்று சாதனை படைக்கப்பட்டது.

தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்படுகிறது. அதில் 80 சதவீதம் கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.

கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. நேற்று 100 கோடி தடுப்பூசியை கடந்ததை தொடர்ந்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவர் ஆதர் புன வல்லாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

சீரம் இன்ஸ்டிடியூட்டில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடர்ந்து நாங்கள் அதிகரித்து வருகிறோம். தற்போது மாதத்திற்கு 22 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக இந்த உற்பத்தியை 24 கோடியாக உயர்த்த உள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் நாங்கள் மருந்துகளை சப்ளை செய்து வருகிறோம்.

அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதாக இருந்தால் அதை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக முதியவர்களுக்கு பூஸ்டர் ஊசி போட வாய்ப்பு இருக்கிறது. அதற்கு தேவையான அளவு நாங்கள் சப்ளை செய்வோம்.

சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளும் பிரத்யேகமாக ‘கோவாவேக்ஸ்’ என்ற பெயரில் தயாரிக்க உள்ளோம். இந்த மருந்து விரைவில் சோதனைகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த தடுப்பூசி மருந்துகள் குழந்தைகளுக்கு போடப்படும்.

maalaimalar