தரமற்ற முறையில் இனிப்பு, காரம் தயாரிப்பு; உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

தீபாவளி, இனிப்பு, காரம், தரமற்ற, உணவு பாதுகாப்பு துறை

கோவை: தீபாவளியை முன்னிட்டு இனிப்பகங்களில், தயாரிக்கப்படும் உணவு வகைகள் தரமானதாக உள்ளதா? என்பதை கண்டறிய மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இனிப்பு வகைகளில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தரமற்ற முறையில் இனிப்பு, காரம் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது: உணவு பொருட்களுக்கு தரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உணவு கையாளுதல், பரிமாறுதல் பணிகளை மேற்கொள்பவர்கள் கையுறைகள், தலைக்கவசம், மேலங்கிகள் அணிய வேண்டும். தயாரிக்கும் இடங்கள் சுத்தமாகவும், ஈக்கள் இன்றியும் இருக்க வேண்டும்.தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை செய்தித்தாள்கள் கொண்டு மூடி வைத்தாலோ, பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிட்டாலோ, ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உபயோகிக்கக் கூடாது.

சில்லரை முறையில் விற்பனை செய்ய தயாரிக்கப்படும் இனிப்பு, காரங்களில், காலாவதி தேதி, பயன்படுத்தும் தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.வீட்டில் இனிப்பு தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தற்காலிக அனுமதி பெற வேண்டும். பெறாவிடில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த புகார்களை, உணவுப்பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

dinamalar