கொசுக்களை கட்டுப்படுத்தும் அணு விஞ்ஞானம்; சீன ஆராய்ச்சி குழுவில் சாதிக்கும் தமிழர்

மதுரை: ‘ கொசுத் தொல்லை தாங்க முடியல…’ என்ற இந்த டயலாக்கை மெட்ரோபாலிடன் சிட்டி முதல் டெக்னாலஜி அறியாத குக்கிராமங்கள் வரை சொல்லாத, கேட்காத மக்களே இல்லை. அந்த அளவிற்கு ‘கொசுக் கடி’ இம்சைப்படுத்தி வருகிறது. இவற்றின் மூலம் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களும் அபாயகர பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் இம்சிக்கும் இந்த ‘கொசு பிரச்னை’யை ஒழிக்க ஏராள ஆய்வுகள் நடக்கின்றன. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் எஸ்.டி.ஐ., (Sterile Insect Technique) என்ற மலட்டு பூச்சி தொழில் நுட்பத்தை பின்பற்றி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடைமுறை உள்ளது. ஆனால் இந்தியா இத்தொழில்நுட்பம் குறித்து யோசிக்கக்கூடவில்லை என்கின்றனர், அந்நாடுகளில் வாழும் இந்திய விஞ்ஞானிகள்.

சீனாவின் ஐ.என்.ஏ.எஸ்.,(Institute of Nuclear-Agricultural Sciences)ல் நடந்த எஸ்.ஐ.டி., தொழில்நுட்ப ஆய்வில், தமிழகத்தின் சங்கரன்கோவிலை சேர்ந்த அணு வேளாண் உயிர்தொழில் நுட்பவியல் விஞ்ஞானி ராமசாமி ராஜேஷ்குமார் முக்கிய பங்காற்றி பெருமை சேர்த்துள்ளார்.

மதுரை வந்த அவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: உலகளவில் பலநூறு ஆண்டுகளாக கொசுவும், அதனால் ஏற்படும் நோய்ப் பாதிப்பு பிரச்னையும் பெரும் சவாலாக உள்ளது. டி.இ.என்.பி., 1 முதல் 4 வகை வைரஸ்கள் மூலம் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, என்செபாலிடிஸ் உள்ளிட்ட அபாயகர நோய்கள் பரவுகின்றன. குழந்தைகளை இரண்டாவது முறை டெங்கு பாதித்தால் உயிரிழக்கும் ஆபத்து 5 மடங்கு அதிகம்.தற்போது ‘கொரோனா மற்றும் டெங்கு இரண்டும் இணைந்து ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக மோசமானதாக இருக்கும்’ என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இச்சூழலில் இந்தியாவும் கொசுவை ஒழிக்கும் எஸ்.ஐ.டி., தொழில் நுட்பம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள முன்வரவேண்டும்.

எஸ்.ஐ.டி., ஓர் விளக்கம்

இத்தொழில்நுட்பத்தின்படி ஆண் கொசுக்களை தனியாக வளர்த்து அவற்றுக்கு அணு விஞ்ஞானம் மூலம் கதிர்வீச்சை (ரேடியேஷன்) செலுத்தி கருத்தடை செய்யப்படுகிறது. இதில் மலட்டுத்தன்மையுடன் உருவாகும் ஆண் கொசுக்களை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விட்டு, அங்குள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தப்படுகிறது. கதிர்வீச்சு மூலம் கருத்தடை செய்யப்பட்டுள்ளதால் கொசு இனப் பெருக்கம் தடைபடுகிறது.வரும் காலத்தில் அணு விஞ்ஞானத்தை பயன்படுத்தி தான் மருத்துவம் மற்றும் விவசாயம் தொடர்பான தொழில்களில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது.

உலகளவில் அதற்கான பல ஆய்வுகள் நடக்கின்றன. மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வேளாண் உள்ளிட்ட வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கெடுதல் தரும் பூச்சிகள் மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்தும் இதுபோன்ற ஆய்வுகள் இன்றியமையாதது. இது சார்ந்த ஆராய்ச்சிகள், நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

dinamalar