டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக காற்று தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது.
புதுடெல்லி, டெல்லியில் கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின்போது, காற்று மாசு கட்டுப்பட்டு இருந்தது. ஆறுகளில் நீரும் தெளிவுடன் காணப்பட்டது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது.
கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருப்பதால், டெல்லி மக்கள் திண்டாடி வருகின்றனர். டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமொன்றில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த தயார் என தெரிவித்தது.
இதேபோன்று டெல்லியின் என்.சி.ஆர். பகுதிகளை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தினால் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என ஆலோசனையும் வழங்கியது.
டெல்லியில் காற்று மாசு மிக மோசம் என்ற பிரிவில் நேற்று இருந்தது. காற்று தர குறியீடு ஒட்டு மொத்தத்தில் 318 ஆக இருந்தது. இந்த நிலையில், காற்று தர குறியீடு இன்று 396 ஆக உள்ளது. டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக காற்று தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது.
dailythanthi