சபாபதி

நடிகர் சந்தானம்

நடிகை     பிரீத்தி வர்மா

இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ்

இசை சாம் சி.எஸ்.

ஓளிப்பதிவு பாஸ்கர் ஆறுமுகம்

பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கி திக்கி பேசுகிறார் சந்தானம். இவருடைய அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

பல வேலைகளுக்கு செல்லும் சந்தானத்திற்கு அங்கு நிறைய அவமானங்கள் ஏற்படுகிறது. இதனால் விரக்தி அடையும் சந்தானம், கோபத்தில் ஒருநாள் குடித்து விட்டு வீட்டில் கலவரம் செய்கிறார்.

போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் நடக்கிறது. இதன் மூலம் விதி விளையாடுகிறது. பின் சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விதியின் விளையாட்டில் சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கம் போல் படத்தில் சந்தானம் தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திக்கி திக்கி பேச மிகவும் சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. நாயகி பிரீத்தி வர்மாவுக்கு அதிகம் வேலையில்லை. படத்தில் சந்தானத்திற்கு பிறகு எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு பாராட்டக்குரிய வகையில் இருக்கிறது. தந்தைக்குரிய பொறுப்புடன் நடித்து கைத்தட்டல் வாங்குகிறார். சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் புகழ். இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

ஒருவர் வாழ்க்கையில் விதி விளையாடுவதை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ். கதைக்களத்தை சிறப்பாக சரியான முறையிலும் கொண்டு சென்றிருக்கிறார். படத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். படத்தில் டைமிங் பஞ்ச்சும், நகைச்சுவையும் படத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு.

சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘சபாபதி’ சபாஷ் போடலாம்.

maalaimalar