ராஜஸ்தானில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர், உருமாறிய ஒமைக்ரன் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து உலகமெங்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் 10 நாளில் கிட்டத்தட்ட 57 நாடுகளில் இந்த வைரஸ் கால்பதித்து விட்டது. இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து விட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரை சேர்ந்தவர்கள். அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று வந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேரும் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைத்து நோயாளிகளும் நலமாக உள்ளனர். 9 பேரின் இரத்த பரிசோதனை மாதிரிகள் மற்றும் சி.டி. ஸ்கேன்கள் முற்றிலும் இயல்பான நிலையில் உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 9 பேரும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
dailythanthi