நடிகர் மைக்கேல் தங்கதுரை
நடிகை சனம் ஷெட்டி
இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன்
இசை சிவா
ஓளிப்பதிவு கல்யாண் வெங்கட்ராமன்
தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நாயகன் மைக்கேல் தங்கதுரை. இவரின் முதலாளி கஜராஜ், அமைச்சரிடம் உதவியாளராக இருந்த ஜெயக்குமாரைப் பின் தொடரும் வேலையை கொடுக்கிறார். கஜராஜின் பொய் சொல்லி தன்னிடம் இந்த வேலையை கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்த மைக்கேல், வேலையை விட்டு விலகுகிறார்.
மேலும் ஜெயக்குமாருக்கு போன் செய்து உங்களை சிலர் பின் தொடர்கிறார்கள் என்ற விஷயத்தை சொல்லி விடுகிறார். இதனால் கோபமடையும் கஜராஜ், அடியாட்களை வைத்து மைக்கேலின் காதலி சனம் ஷெட்டியை கடத்துகிறார். இறுதியில் மைக்கேல் தனது காதலி சனம் ஷெட்டியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த மைக்கேல் தங்கதுரை இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனத்தை ஈர்த்து இருக்கிறார். அதிக வசனங்கள் இல்லாமல் உணர்வுகளை நடிப்பால் வெளிப்படுத்தியதற்கு பாராட்டுகள்.
மைக்கேல் தங்கதுரையின் காதலியாக வரும் நாயகி சனம் ஷெட்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மைக்கேல், சனம் ஷெட்டியின் காதல் காட்சிகள் ஓரளவிற்கு ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. சேதுவாக வரும் சாய் ராஜ்குமார் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். டிடெக்டிவாக வரும் கஜராஜ், அமைச்சர் உதவியாளர் ஜெயக்குமார், அருள் டி சங்கர் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
டிடெக்டிவ், கிரைம், திரில்லர் கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன். படத்தில் நிறைய காட்சிகள் மிஷ்கின் பாணியில் இருக்கிறது. ஹீரோவுக்கு பிளாஸ்பேக் இல்லாமல் அவரை பற்றி வசனங்கள் மூலம் சொல்லியிருப்பது சிறப்பு. அதுபோல் பல விஷயங்கள் வசனங்கள் இல்லாமல் புரியும் படி எடுத்திருக்கிறார். கண்டெயினர் சண்டைக்காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் அருமை.
கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கிரைம் திரில்லர் படத்திற்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சிவா.
மொத்தத்தில் ‘ஊமைச் செந்நாய்’ நன்றாக பேசும்.