ஒரே நாளில் 495 பேருக்கு ஒமைக்ரான் தொற்று- இந்தியாவில் பாதிப்பு 2630 ஆக உயர்வு

ஒமைக்ரான் வைரஸ்

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,630ஆக அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி பாதிப்பு 2,135ஆக இருந்தது.

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2-ந்தேதி கர்நாடகாவின் மருத்துவர் உள்பட 2 பேருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு பல்வேறு மாநிலங்களுக்கும் ஒமைக்ரான் வேகமாக பரவியது.

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் அதிகரிக்கும் பாதிப்புகளில் இன்றைய ஒமைக்ரான் பாதிப்பு அதிகமானதாகும். ஒமைக்ரானுக்கான பரிசோதனை குறைவாக உள்ளதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,630ஆக அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி பாதிப்பு 2,135ஆக இருந்தது.

26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 797 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் டெல்லி (465), ராஜஸ்தான் (236), கேரளா (234), கர்நாடகா (226), குஜராத் (204), தமிழ்நாடு (121) ஆகிய மாநிலங்கள் பாதிப்பில் உள்ளன.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 995 பேர் குணமடைந்து உள்ளனர். 1135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 330 பேர் குணமடைந்து உள்ளனர். ராஜஸ்தானில் 155 பேரும், குஜராத்தில் 112 பேரும், தமிழ்நாட்டில் 110 பேரும் ஒமைக்ரானில் இருந்து குணமடைந்து உள்ளனர்.