உ.பி. போட்டி: களம் இறங்குகிறார் மம்தா…!

மக்களவைத் தேர்தலின் போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி இன்று மீண்டும் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

“உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை. ஆனால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக பிப்ரவரி 8-இல் பிரசாரம் செய்ய உள்ளேன். 2024 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடும். பாஜகவை விரட்டி அடிக்க வேண்டும்.

கோவா மற்றும் திரிபுராவில் திரிணமூல் கட்சியை பலப்படுத்தி உள்ளோம். அங்கு எங்களின் வாக்கு விகிதம் 20 சதவீதத்திற்கு மேல் இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை வலிமையானதாக மாற்றுவோம். அப்போது தான் மக்களவை தேர்தலில் 42 இடங்களையும் கைப்பற்ற முடியும். திரிணமூலின் முதல் செயற்குழுக் கூட்டத்தை டெல்லியில் நடத்தவுள்ளேன்.”

வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கோவாவில் திரிணமூல் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

dailythanthi