ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு: சிலையை திறந்துவைத்தபின் பிரதமர் மோடி பேச்சு

ராமானுஜருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலை, இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஐதராபாத்,  வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அவரது சிலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ 1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பெருமை மிகுந்த சிலையை திறந்துவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி  இன்று  மாலை சின்ன ஜீயர் ஆசிரமத்திற்கு வந்தார். மாலை 6.30 மணி அளவில் பிரதமர் மோடி சமத்துவத்திற்கான சிலை என அழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் சிலையை திறந்துவைத்தார்.

சிலையை திறந்துவைத்தபின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலையை திறந்துவைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  வசந்த பஞ்சமி தினத்தில் ராமானுஜர் திறப்புவிழா நடைபெறுவது மிகவும் சிறப்பானது. இங்கு நடத்தப்படும் யாகங்களின் பலனை, நாட்டின் 130 கோடி மக்களுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.

ராமானுஜர் வடமொழியில் உரைகள் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களையும் வளர்த்துள்ளார். ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவருக்கு நெருங்கிய தொடர்புடைய ஆலயங்களில் திருப்பாவை முக்கியத்துவம் பெருகிறது. ராமானுஜருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும். உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வனக்கங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

dailythanthi