இமாச்சலப்பிரதேசத்தில் பனிப்பொழிவு: மக்கள் கடும் அவதி

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிம்லா, இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் இந்த ஆண்டு மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அங்கு மைனஸ் 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் குளிர் தீவிரமடைந்ததால், லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில் வெப்பநிலை மைனஸ் 12.5 டிகிரி செல்சியசாகக் குறைந்துள்ளது. மேலும், கின்னவுர் மாவட்டத்தில் ஆப்பிள் தோட்டங்களுக்கு பிரபலமான கல்பாவில் மைனஸ் 7.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், சுற்றுலாத் தலமான குப்ரியில் 60.0 செ.மீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, இது மாநிலத்திலேயே அதிகபட்சமாக பனிப்பொழிவாகும். மேலும் சோபால் மற்றும் சிம்லாவில் முறையே 45.7 செ.மீ மற்றும் 32.6 செ.மீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக பல சாலைகளை பனி மூடியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மாநிலத்தில் மேலும் பனிப்பொழிவு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

dailythanthi