உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது எப்படி? – வெளியானது தகவல்!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதை அடுத்து அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆறு நாட்களாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்தி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும், பெலாரஸ் நாட்டின் எல்லையில், உக்ரைன் – ரஷ்யா அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் நேற்று, உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில், ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்த தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தர். இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கமிஷனர் மனோஜ் ராஜன், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா, கர்நாடக மாநிலம் ஹாவேரியில் உள்ள சாலகேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர். மாணவர் நவீன் சேகரப்பாவின் உயிரிழப்பு குறித்த தகவலை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எங்களுக்கு தெரிவித்தது. கார்கிவ் நகரில், அருகில் உள்ள கடைக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்க நவீன் சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்து உள்ளார். நவீன் உயிரிழப்பு குறித்து உள்ளூர் நிர்வாக அதிகாரி ஒருவர் அவரது நண்பருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Samayam