உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த 7 நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட இடங்களில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசம் அடைந்து வருவதால், அங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு, “ஆப்பரேஷன் கங்கா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று, உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கார்கிவ் நகரிலிருந்து வெளியேறி போஷின், பேபைய், பெசிலுவோகா நகரங்களுக்கு உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் இந்தியர்கள் செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நேற்று, கீவ் நகரில் ரஷ்யப் படைகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது, கார்கிவ் நகரிலும் ரஷ்யப் படைகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருவதால், அங்கிருந்தும் இந்தியர்கள் வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
Samayam