இந்திய வரலாற்று பாடப் புத்தகங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஏலூரு:

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூருவில் உள்ள சர் சி. ஆர். ரெட்டி கல்வி நிலையங்களின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:

இளைய தலைமுறையினரிடையே நமது மதிப்பு வாய்ந்த கலாச்சார பாரம்பரியம் குறித்த பெருமையை கொண்டு செல்லும் வகையில், இந்திய கண்ணோட்டத்தோடு வரலாற்று பாடப் புத்தகங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக நமது வேர்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும்.

பசி, ஊழல் மற்றும் பாகுபாடு இல்லாத சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.அனைத்தையும் அரசே செய்ய முடியாது. தனி நபர்கள், தொழில்துறையினர் மற்றும் சமுதாயத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

நாட்டை முன்னேற்றுவதற்கான இயக்கமாக கல்வியை கருத வேண்டும். தங்கள் வாழ்வில் ஆசிரியர்கள் ஆற்றிய பங்கு குறித்து மாணவர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கம், திறமை, நடத்தை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தங்களது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்.(தேர்தலில்) சாதி, பணம்,  குற்றங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை மொழிகளை கற்றாலும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.தேசிய கல்வி கொள்கையை அனைத்து மாநிலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Malaimalar