சென்னை மேயர் பதவியை அலங்கரிக்கும் பட்டியல் சமூக முதல் பெண்: யார் இந்த பிரியா?

சென்னை:

சென்னையின் முதல் பெண் மேயர் மட்டுமல்ல சென்னையின் முதல் பட்டியல் சமூகப் பெண் மேயர் என்ற பெருமையுடன் சென்னை மேயர் பதவியை அலங்கரிக்க உள்ள பிரியா யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் சென்னை மக்கள் உள்ளனர்.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்தபோதே, சென்னையின் மேயர் பதவியை அலங்கரிக்கப்போகும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் யார் என்ற கேள்விகள் எழுந்தன.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 19935ம் ஆண்டு திருத்தச் சட்டத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சியில் மேயர் பதவியில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேயர் பதவியை வகித்து வந்துள்ளனர். சென்னையின் முதல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மேயராக ஜே.சிவசண்முகம் பிள்ளை பதவி வகித்தார். இவரே சுதந்திரத்திற்கு பிறகான, தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் பதவியை வகித்தார். அவருக்கு பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த என்.சிவராஜ் சென்னையின் மேயர் பதவியை வகித்துள்ளார். இவர் அம்பேத்கருடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டவர். இவர்களை அடுத்து, தலித் தலைவர் ரெட்டைமலை சீனிவாசனின் மகனும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான பா.பரமேசுவரன் சென்னை மேயராக இருந்தார். இவக்ரளை திமுகவைச் சேர்ந்த குசேலர், வை. பாலசுந்தரம் ஆகியோர் சென்னையின் மேயர் பதவியை வகித்துள்ளனர்.

ஆனால், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பதவியை இதுவரை ஒரு பெண்கூட வகித்தத்தில்லை. சென்னை மாநகராட்சி பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, அவர்தான் சென்னையின் முதல் பெண் மேயர் மட்டுமல்ல தலித் பெண் மேயர் என்ற பெருமையையும் பெறப்போகிறார் என்பதால், சென்னையின் மேயர் பதவியை அலங்கரிக்கப் போகிறவர் யார் என்ற எதிர்ப்பார்பு அரசியல் களத்திலும் மக்கள் மத்தியிலும் நிலவியது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 178 இடங்களில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியது. இதில் திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள 13 பட்டியல் சமூகப் பெண்களில் யார் மேயர் வேட்பாளாராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில், 74வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற பிரியா (28) சென்னையின் மேயர் வேட்பாளராகத் திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னையின் முதல் பெண் மேயர் மட்டுமல்ல சென்னையின் முதல் பட்டியல் சமூகப் பெண் மேயர் என்ற பெருமையுடன் சென்னை மேயர் பதவியை அலங்கரிக்க உள்ள பிரியா யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் சென்னை மக்கள் உள்ளனர்.

திமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியா, எம்.காம் பட்டம் பெற்றுள்ளார். இவர் திமுக பிரமுக பெரம்பூர் ராஜனின் மகள் ஆவார். திரு.வி.க. நகர் தொகுதி முன்னள் எம்.எல்.ஏ செங்கை சிவம் பிரியாவின் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களின் குடும்பம் 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் விசுவாசிகளாக உள்ளனர். இவர் அமைச்சர் பி.கே.சேகர்ப் பாபுவின் சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையின் முதல் பெண் மேயராக உள்ள பிரியாவுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Indianexpress