புதுச்சேரி:
புதுச்சேரியின் சிறந்த கட்டிடக்கலையின் பாரம்பரியத்தை பாதுகாத்து அழகிய கடற்கரை, நீர்நிலைகள், குளங்கள், வளமான ஆன்மிக தலங்களின் அறிவுசார்ந்த வரலாற்று பெருமைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தொடக்க விழா நேற்று மாலை அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி பாரம்பரிய விழாவை தொடங்கி வைத்தார். அப்போது பேசியதாவது:-
புதுச்சேரியில் பாரம்பரிய கட்டிடங்களுக்கென தனி மதிப்புண்டு. இது அரசுக்கும் தெரியும். இதனால் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்தோம்.
இங்குள்ள கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் ‘ப்ளூ பிளாக் பீச்’ பட்டியலில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை இடம் பிடித்துள்ளது. எனவே கடற்கரைகளை மேலும் மேம்படுத்த கடற்கரை திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். வருகிற தமிழ் புத்தாண்டு அன்று இந்த திருவிழா தொடங்கி ஒவ்வொரு கடற்கரையிலும் நடத்த ஆலோசித்துள்ளோம்.
Malaimalar