திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற அன்றே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு

திருப்பதி

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று காலை திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள பக்தர்கள் பொருட்கள் வைப்பறை, பழைய அன்னதானக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சாதாரணப் பக்தர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் தொடங்கி 10 நாட்களுக்குமேல் ஆகிறது. பக்தர்கள் சிரமமில்லாமல் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

திருமலையில் இலவச தரிசனம் தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப அன்னதானம் வழங்கப்படும். இதுதொடர்பாக அன்னதானத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவுடன் ரொட்டியும், சப்பாத்தியும் வழங்கப்படும். திருமலையில் மேலும் இரு பகுதிகளில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளை மீண்டும் தொடங்க கால அவகாசம் எடுத்துள்ளோம். அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல், கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு வழங்கப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இன்று வரை உயர்த்தவில்லை. தற்போது அதை உயர்த்தும் எண்ணமும் இல்லை.

சாதாரணப் பக்தர்களுக்கு விரைவான தரிசனம் வழங்கப்படும். இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதற்காக அவர்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டிக்கெட் பெறும் சாதாரணப் பக்தர்கள் அன்றே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். அதற்காக திருப்பதி, திருமலையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

திருமலையில் உள்ளூர் ஓட்டல்களும், துரித உணவகங்களும் வழக்கம்போல் செயல்படும். அதன் உரிமையாளர்களுக்கு எந்த ஒரு நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை. திருமலையில் பல்வேறு இடங்களில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்க கவுண்டர்கள் அமைக்கப்படும்.

 

Malaimalar