மர்மங்கள் நிறைந்த பர்வதமலை.. கடினமான கடப்பாரை நெட்டு பகுதி.. துணைக்கு வரும் “சித்தர்கள்”?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள பர்வதமலையின் சிறப்புகள் என்ன?

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தென்மகாதேவமங்கலத்தை ஒட்டியுள்ளது பர்வதமலை. இது ஒரு மலை பகுதியாகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளை போன்றே பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலை என சொல்லப்படுகிறது.

செங்கத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த பர்வதமலை. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை என்ற பொருளை கொண்டுள்ளது.

என்ன பெயர்கள்

இந்த மலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்சீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை என்ற பெயர்களும் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களை பற்றியும் அங்குள்ள மக்களை பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க காலத்து நூல் மலைபடுகடாம். இந்த நூலில் நவிரமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. பர்வதமலை நவிரமலையைதான் நாம் தற்போது பர்வதமலை என்று அழைத்து வருகிறோம். இந்த இடம் மூங்கில் செழித்து வளரும் பகுதி என்றழைக்கப்படுகிறது. இந்த மலையின் மீது மல்லிகார்ஜுன சுவாமி கோயில் உள்ளது. இது சித்தர்களுக்கு பெயர் பெற்ற மலையாகும். இந்த மலை 2855 அடி உயரம். இந்த மலை ஜவ்வாது மலையின் கிளை மலையாகும்.

22 சதுர கி.மீ.

இதன் மொத்த பரபரப்பளவும் 22 சதுர கி.மீ. ஆகும். ஆண்டுதோறும் இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு நிறைய மர்மங்களும் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மலையின் கீழ் ஆதிவாசிகள் வாழ்வதாக சொல்கிறார்கள். ஆனால் அதுகுறித்து உண்மை தெரியவில்லை. இந்த மலையில் 3 குன்றுகள் உள்ளன. கோயில் அமைந்துள்ள பகுதியே மிகவும் உயரமான பகுதியாகும்.

 

செய்யாற்றின் கிளை

பர்வதமலையில் செய்யாற்றின் கிளை ஆறுகள் பாய்கின்றன. இந்த மலையில் சில தூரத்திற்கு படிக்கட்டுகள் நிறைந்திருக்கும். கடப்பாரை நெட்டு வரை வழி சற்று திகிலாகத்தான் இருக்கும். இதை கடக்கும் வரை ஆழமான பள்ளத்தாக்காகவே இருக்கும். போவதற்கு ஒரு வழி, திரும்பி வருவதற்கு ஒரு வழி பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஜவ்வாது மலையில் சுற்றி மூலிகைகள் இருப்பதால் மூலிகை காற்றை சுவாசிக்க மக்கள் அதிகளவில் இங்கு வருகிறார்கள்.

நாய்கள் துணை

இந்த பாதையில் மலையேறுபவர்களுக்கு நாய்கள் (பைரவர்கள்) வழித்துணையாக வருகின்றன. இந்த நாய்கள் மலையில் வாழும் சித்தர்களின் அம்சம் என்கிறது ஐதீகம். இந்த கோயிலை சுற்றி ஒரு பழங்காலத்து கோட்டையும் உள்ளது. இது நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியது என்கிறார்கள்.

 

OneindiaTamil