உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தூண்டலாம் உலகமெங்கும் கொரோனா அலை பேரலையாக வீசியது. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டது. ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா எழுச்சியை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து, எந்தவொரு நெருக்கடியும் வராமல் பார்த்துக்கொண்டது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-
மார்ச் 15-ந் தேதியுடன் முடிந்த வாரத்தில் கொரோனா சராசரி பாதிப்பு 3,536 ஆகும். உலகளாவிய பாதிப்பில் இந்தியாவின் பங்களிப்பு 0.21 சதவீதம் ஆகும்.
பல நாடுகளில் இன்னும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அது அவை முன்னர் சந்தித்த எழுச்சிகளை விட அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் அறிவிக்கப்பட்ட உச்சம், மிகவும் குறைவாக இருந்தது. மட்டுமின்றி, நிலையான முயற்சிகளும் விரைவில் கொரோனா குறைவதற்கு வழிவகுத்தது.
ஒமைக்ரான் வைரசால் உலகளாவிய பாதிப்பு எழுச்சி முந்தைய அலைகளை விட 6 மடங்கு உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆனால் இந்தியா அதன் பரவலைக்கட்டுப்படுத்த முடிந்தது. இதனால் ஆஸ்பத்திரி சேர்க்கை குறைந்தது. முந்தைய எழுச்சிகளைவிட குறைவான உயிரிழப்புகள்தான் ஏற்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19-ஐ நிர்வகிப்பதற்கான இந்தியாவின் பொது சுகாதாரப் பதிலளிப்பு குறித்து நேற்று ஒரு இணையவழி விளக்க காட்சி நடைபெற்றது. அதில் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாடு ஒமைக்ரான் எழுச்சியை மற்றவர்களை விட மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தியது” என குறிப்பிட்டார்.
மேலும் அதிகாரிகள் கூறுகையில், “திறம்பட மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவற்றாலும், துரிதப்படுத்தப்பட்ட தடுப்பூசி இயக்கத்தாலும், இந்தியாவில் 3-வது அலையில் ஆஸ்பத்திரி சேர்க்கை குறைந்தது, இறப்புகளும் குறைவான பங்களிப்பையே செய்தன” என தெரிவித்தனர்.
இந்தியாவில் வயது வந்தோரில் 96.74 கோடி பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட 2.96 மடங்கு அதிகம். ரஷிய மக்கள் தொகையை விட 6.71 மடங்கு அதிகம் என தகவல்கள் கூறுகின்றன.
81.52 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி உள்ளனர். இது பிரேசில் மக்கள்தொகையைப்போன்று 3.83 மடங்கு அதிகம். இங்கிலாந்து மக்கள் தொகையை காட்டிலும் 12.13 மடங்கு அதிகம் ஆகும்.
malaimalar