பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 2.10 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது. 23 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே தனித்தனியாக கிரிவலம் சென்றனர். காணும் இடமெல்லாம் பலர் அன்னதானம் வழங்கினர்.
மாலை சுமார் 5 மணிக்கு மேலிருந்து பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் கற்பூர தீபம், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
23 மாதங்களுக்கு பிறகு கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.
Malaimalar