தமிழகத்தில் 101 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயில்- பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

 

பெரும்பாலான நகரங்களில் நேற்று வெயிலின் தாக்கம் 101.3 டிகிரியாக கொளுத்தியது. இதனால் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. சாலையில் நடந்து சென்ற மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி சென்றதை பார்க்க முடிந்தது. மேலும் சிலர் தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டால் போர்த்தியபடியும், தலைகவசம் அணிந்தபடியும் சாலைகளில் சென்றனர்.

மேலும் இரவிலும் கடும் புளுக்கம் நீடித்தது. இதனால் உடலில் வியர்த்து நனைந்தபடியே இருந்ததால் மின் விசிறிகளை முழு வேகத்தில் வைத்தும் புளுக்கம் குறைந்தபாடில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தனர்.

வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க இயற்கை குளிர்பானங்களான இளநீர், நுங்கு, கம்பங்கூழ், தர்பூசணி மற்றும் செயற்கை குளிர்பானங்களையும் வாங்கி அருந்தி பொதுமக்கள் சூட்டை தணித்தனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் சிலர் பகல் நேரங்களில் ஆறு, ஏரி, குளங்களுக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.

நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து தற்போது 101 டிகிரியையும் தாண்டி உள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னி நட்சத்திர காலங்களில் மதிய நேரங்களில் 11 மணி முதல் 4 மணி வரை வீட்டில் இருப்பது நல்லது. தேவையான அளவு இயற்கை குளிர்பானங்கள், தண்ணீர் குடிக்க வேண்டும், இதன் மூலம் கோடை காலம் மூலம் ஏற்படும் நோயை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெயில் கொளுத்துவதால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில், வெயிலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க நீர் மோர், பழரசம், கூழ், கற்றாழை சாறு, முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றை மக்கள் நாடி செல்கின்றனர். இதனால் பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் உஷாராக இருந்து கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் எதிரெ திரே செல்லும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் ஏற்படும் ஒளிச்சிதறல்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களில் இருந்து வெளியிடும் புகையை கிரகித்து கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு குளுமையான காற்று கிடைப்பதற்கும், சாலையை அழகூட்டுவதற்கும் பூச்செடிகள் நடவு செய்யப்படுகின்றன.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் உடையாப்பட்டியில் இருந்து தலைவாசல் அடுத்த வி.கூட்டுரோடு வரையிலான, 4 வழிச்சாலை மைய தடுப்புக்களில், வறட்சியை தாங்கி வளரும் அரளி பூச்செடிகளை நடவு செய்து வளர்த்து பராமரித்து வருகின்றனர்.

இதேபோல் எல்லா பகுதிகளிலும் உள்ள 4 வழிச்சாலைகளில் பூச்செடிகள் நடப்பட்டு உள்ளன. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தினால், அரளிப்பூச் செடிகள் காய்ந்து வருகின்றன.

இதுமட்டுமின்றி, அனல் காற்றும் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பூச்செடிகளுக்கு நீர் ஊற்றி முறையாக பராமரித்து பாதுகாக்கவும், காய்ந்துபோன செடிகள் அகற்றப்பட்ட இடங்களில் புதிய செடிகளை நட்டு வளர்க்கவும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுங்கச்சாவடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Malaimalar