‘ஒரு அணி- ஒரு திட்டம்’: இந்தியா- ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

டெல்லியில் இன்று 14-வது இந்தியா- ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இன்று மதியம் 3.40 மணியளவில் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த ஜப்பான் பிரதமரை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்திற்கு இன்று மாலை 5 மணியளவில் சென்ற ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் மோடி வரவேற்றார். பிறகு, 14-வது உச்ச மாநாட்டில் இருவரும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக, இணையப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

இந்தியா- ஜப்பான் இடையே முன்னேற்றம், செழிப்பு மற்றும் கூட்டாண்மை ஆகியவை இரு நாட்டு உறவுகளின் அடிப்படையாகும். இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியா-ஜப்பான் இடையேயான பொருளாதார கூட்டுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் இந்தியா-ஜப்பான் ‘ஒரு குழு- ஒரு திட்டமாக’ செயல்படுகின்றன.

பிரதமர் கிஷிடா இந்தியாவின் பழைய நண்பர். அவர் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது அவருடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பாதுகாப்பான, நம்பகமான, யூகிக்கக்கூடிய மற்றும் நிலையான எரிசக்தி விநியோகத்தின் முக்கியத்துவத்தை இந்தியாவும் ஜப்பானும் புரிந்துகொள்கின்றன. நிலையான பொருளாதார வளர்ச்சியை அடையவும், பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும் இது அவசியம். இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

ஜப்பான் இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Malaimalar