கொரோனா பரவலின்போது மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொள்ள மறுத்ததால் 877 சிசுக்கள், 61 தாய்மார்கள் உயிரிழப்பு

மேகாலயா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தை இறப்புகள் பதிவானது குறித்து  கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மேகாலயா அரசு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டன. சரியான மருத்துவ கவனிப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்ட பயம் காரணமாக தங்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். கொரோனா பரிசோதனை செய்யவும் மறுத்துவிட்டனர்.

பெண்கள் சுகாதார வசதிகளைப் பார்வையிடுவதைத் தவிர்த்துவிட்டாலும், ஆரம்ப சுகாதாரத்தில் இருந்து வீடுகளுக்குச் சென்று ஆலோனை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணித்து பிரசவத்தின்போது மருத்துவமனைக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது.

அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் பிரசவ தேதிக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே மருத்துவமனைகளில் அனுமதிக்க வலியுறுத்தினோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Malaimalar