பிரதமர் மோடியை வீழ்த்த புதிய அணி: தேர்தல் வியூகம் வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோருக்கு ரூ.300 கோடி

2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணியை உருவாக்க வேண்டும். மேற்கு வங்காள முதல் -மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவருமே தங்களை மாற்று தலைவராக முன்னிறுத்தி கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லது மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதே போன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவும் மும்பை சென்று உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேசினார். அதோடு மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் மோடியை வீழ்த்த புதிய அணியை உருவாக்கி வரும் சந்திரசேகர ராவ் தேர்தல் ஆலோசனை மற்றும் வியூகம் அமைப்பதற்காக பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்படுகிறார். தனது திட்டத்தை செயல்படுத்த அவர் பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த மாதம் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத் சென்று சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்து பேசினார். அப்போது 2024 பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதாவை எதிர்த்து மாற்று அணியை ஏற்படுத்த இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ரூ.300 கோடி அவருடன் சந்திரசேகர ராவ் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை சந்திரசேகர ராவ் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தேசிய அளவில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் என்னுடன் இணைந்து பணியாற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. பிரசாந்த் கிஷோரை ஏன் வெடிகுண்டாக பார்க்கிறார்கள். அவர்கள் கூச்சலிடுவது ஏன்?

பிரசாந்த் கிஷோர் எனது 8 ஆண்டுகால சிறந்த நண்பர் ஆவார். அவர் பணத்திற்காக வேலை செய்யக்கூடியவர் கிடையாது.

பணம் கொடுத்து வேலை வாங்கும் தொழிலாளி அவர் கிடையாது. நாட்டுக்காக பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

 

 

Malaimalar