ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியர் லோகலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு தொடர்பாக சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி இயக்கம் கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு இதுவரை 180 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 10 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரத்து 372 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் லோகலட்சுமி, பிரியதர்சினி என்ற இரு பள்ளி மாணவியருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பின் இரு மாதம் கடந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், லோகலட்சுமிக்கு கண்பார்வை குறைபாடும், பிரியதர்ஷினிக்கு உடல் பலவீன குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இரு மாணவியருக்கும் சென்னையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இரு மாணவியரும் தடுப்பூசியால் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும், டெல்லிக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைக்குப் பின் முடிவுகள் வெளியாகும் என்றும் பேசிய அமைச்சர், சம்மந்தப்பட்ட மாணவியரின் உடல்நலன் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட அமைச்சர் காந்தியும், தானும், முதல்-அமைச்சரும் தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
Malaimalar