விருதுநகர் பாலியல் சம்பவம், வேலூரில் பெண் டாக்டரை ஆட்டோவில் கடத்தி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது ஆகிய 2 சம்பவங்களிலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஈடுபட்டிருப்பதை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.
இந்த இரண்டு சம்பவங்களில் மட்டுமல்ல… இன்று நாட்டில் நடைபெறும் பெரும்பாலான குற்றச் சம்பவங்களில் சிறுவர்கள் தெரிந்தோ… தெரியாமலோ ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 2017-ம் ஆண்டு 2,376 இளம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 2,034 ஆக குறைந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதையே காண முடிகிறது.
2019-ம் ஆண்டு சுமார் 2,700 பேரும், 2020-ம் ஆண்டு 3,500 பேரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொடூர குற்றவாளியாக மாறி இருக்கிறார்கள்.
2021-ம் ஆண்டிலும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இப்படி சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இதுபோன்று சிறுவர்கள் பிஞ்சிலேயே பழுத்து பெரிய குற்றவாளிகளாக மாறிப்போவது ஏன்? என்பது பற்றி காவல்துறை சார்பில் பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குழந்தைகள் நல ஆர்வலர்களும், மத்திய அரசும் கூட இந்த விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை 2 வகையாக பிரித்து அணுக வேண்டும் என்றும், 16 வயது முதல் 18 வயதுடையவர்கள் பாலியல், கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்கள் செய்த குற்றத்தின் தன்மையை ஆராய வேண்டும் என்றும் பல்வேறு பரிந்துரைகளை காவல்துறை பெண் அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களில் அறிவுறுத்தி உள்ளனர்.
16 வயதில் ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சிறுவன் ஒருவன் தெரியாமல் அந்த குற்றத்தை செய்துவிட்டதாக கருத முடியாது.
எனவே 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் செய்யும் குற்றத்தின் தன்மையையும், அவர்களின் மனநிலையையும் அறிந்து சிறுவர்களை பெரியவர்களாகவே கருதி தண்டனையை வழங்க வேண்டும் என்பதே போலீஸ் தரப்பில் வைக்கப்பட்டு வரும் நெடுங்கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
வயதில் சிறுவர்களாக இருந்த போதிலும் அவர்கள் செய்யும் குற்றச்செயல்களை பொறுத்து அவர்களையும் பெரியவர்களாக கருதியே வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இந்த கோரிக்கையின் முக்கிய அம்சமாகவே இருந்து வருகிறது.
16 வயதில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை பெரியவர்களாகவே கருதி தண்டனை வழங்கும் நடைமுறை வெளிநாடுகள் சிலவற்றில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 16 வயதில் இருந்து 18 வயது வரையிலான சிறுவர்கள் கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் சிறுவர்களாகவே கருதப்பட்டு குறைந்தபட்ச தண்டனையே அளிக்கப்பட்டு வருகிறது.
சிறார் பாதுகாப்பு சட்டத்தின்படி தெரிந்தே பாலியல் ரீதியாக ஒரு பெண்ணிடம் அத்துமீறும் சிறுவன் பாதுகாத்துக் கொள்ளப்படுகிறான். எனவே இந்தியாவிலும் சிறார் சட்டத்திருத்தத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் கடந்த பல ஆண்டுகளாகவே தீவிர ஆலோசனையில் உள்ளன.
நாடு முழுவதும் சிறார் சட்டத்தில் திருத்தம் செய்து கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களையும் அவர்கள் குற்றச்செயலுக்கு ஏற்ப தண்டிக்கும் நிலை ஏற்பட்டால் சிறார் குற்றங்களை தடுப்பதற்கு அதுவும் வழிவகுக்கும்.
பெற்றோர்களின் ஆதரவு இல்லாமலும், வீட்டுக்கு அடங்காமலும் சிறு வயதிலேயே தங்கள் இஷ்டத்துக்கு சுற்றித் திரியும் சிறுவர்களே இளம் குற்றவாளிகளாக மாறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இப்படி வீட்டில் சரியான கால்கட்டு போடப்படாத சிறுவர்கள் மதுவுக்கு அடிமையாவதும், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாவதும் தவிர்க்க முடியாததாகவே மாறி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பாலியல் அத்துமீறல், கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் பின்னணி பற்றி போலீசார் தெரிவிக்கும் தகவல்கள் அதிரவைப்பதாகவே உள்ளது. மிகவும் வறுமையில் வாடும் ஏழை பெற்றோரை தவியாய் தவிக்க விடும் வகையில் ஏழை சிறுவர்கள் பலரே பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறுவர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளை சேர்ந்த ரவுடிகளே துணையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்று இளம் வயதிலேயே திசை மாறும் சிறுவர்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள கூர்நோக்கு இல்லங்கள் தொடங்கப்பட்ட நோக்கத்துடன் முழுமையாக செயல்பட்டாலே போதும், குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களின் எண்ணிக்கையை பூஜியமாக்கிவிடலாம் என்று வேதனைப்பட்டார் போலீஸ் அதிகாரி ஒருவர். கூர்நோக்கு இல்லங்களை பட்டைத்தீட்டப்படுமா?
Malaimalar