சென்னையில் முககவசம் அணியாமல் மக்கள் அலட்சியம்: சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலுக்கு பின்னர் சாந்தமாகி இருக்கிறது. தொற்றின் தீவிரம் வெகுவாக குறைந்துள்ளது. அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 50-க்கு கீழ் வந்துவிட்டது. உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனாவின் கொட்டத்தை அடக்கி வருகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டிருந்தாலும், தொற்று பாதிப்பு இன்னும் முழுமையாக ஒழியவில்லை. எனவே தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் தொடர் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

ஆனால் கொரோனா நம்மை விட்டு விலகி சென்றுவிட்டது என்ற மாயை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் முககவசம் அணியாமல் வெளியே சென்று வருகின்றனர். சமூக இடைவெளி உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் பஸ், ரெயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த காட்சியை பார்க்க முடிகிறது. 10 பேர்களில் ஒருவர்தான் முககவசம் அணிந்து செல்கிறார்.

ஆரம்பத்தில் கொரோனா கால் தடம் பதித்தபோது, மின்னல் வேகத்தில் தொற்று பரவி கொத்து, கொத்தாக மனித உயிர்களை பறித்தது. அப்போது கொரோனாவின் கோரமுகத்தை கண்டு மக்கள் அஞ்சினர். தற்போது கொரோனா சாந்த முகத்தை காட்டுவதால் மக்கள் மத்தியில் பயம் முற்றிலும் போய்விட்டது. எனவே முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அலட்சிய போக்குடன் உள்ளனர். கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 2-வது தவணை போடுவதில் அக்கறை காட்டுவதில்லை.

ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஒழிந்துவிட்டது என்று அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து கட்டுப்பாடுகளை கைவிட்டனர். இதன் விளைவாக தற்போது அங்கு மிக வேகமாக தொற்று பரவி வருகிறது. தமிழகத்திலும் வருகிற ஜுன் மாதம் கொரோனா 4-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த எச்சரிக்கையை நாம் அலட்சியப்படுத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

கொரோனா 4-வது அலை தாக்கினால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். இதன் மூலம் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். இதனை மனதில் வைத்துக்கொண்டு 4-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி, முககவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தாரக மந்திரமாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற நிலை வரும் வரையில் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் தொடர வேண்டும். ‘வரும் முன் காப்போம்’ என்பதை கருத்தில் கொண்டு முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது அபராத நடவடிக்கையை தமிழக அரசு மீண்டும் தீவிரப்படுத்தி எச்சரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும் இருக்கிறது.

 

Malaimalar