குஜராத் தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெற முடியாது- மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் உறுதி

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் தமது கட்சியை களம் இறங்க டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து, கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும், இரண்டு நாள் பயணமாக அகமதாபாத் சென்றுள்ளனர். அங்கு ஆம் ஆத்மி சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அவர்கள், குஜராத்தில் தங்கள் கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதன் மூலம் மாநிலத்தில் நிலவும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இது குறித்து டெல்லியில் ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், உத்தரபிரதேசத்தில் ஒரு இடத்தில் கூட கெஜ்ரிவால் கட்சி வெற்றி பெற முடியவில்லை, உத்தரகாண்ட், கோவாவில் அவரது நிலையை பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

ஆம் ஆத்மி கட்சியினர் ஊடங்கள் மூலம் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாகவும், ஆனால் தேர்தல் களத்தில் எதுவும் நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்தல்கள் மூலம் பாஜக மீண்டும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் ஆட்சி அமைக்கும் என்றும், பிரதமர் மோடி உலக அளவில் மிகவும் விரும்பப்படும் தலைவராக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

பஞ்சாபில் பாஜக மிகவும் தாமதமாக பிரச்சாரத்தை தொடங்கினாலும், வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

 

 

Malaimalar