20 இடங்களில் குண்டுவெடிக்கும்… மோடியை கொல்ல திட்டம்: 2 மாதங்களுக்கு பிறகு வெளியான இ-மெயில் விவரம்

பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் சில தீவிரவாத அமைப்புகளும் பிரதமருக்கு மிரட்டல் விடுத்து வந்தன.

இந்த நிலையில் மும்பையில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகம் மற்றும் பிற சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு இ மெயில் வந்திருக்கிறது.

அந்த இ மெயிலில், “பிப்ரவரி மாதம் 28-ந் தேதி இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். 20 இடங்களில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்படும். சுமார் 2 கோடி மக்களை கொல்ல திட்டமிட்டு உள்ளோம். இதன்மூலம் மிகப்பெரிய அழிவு ஏற்படும். இதற்கான வெடிகுண்டுகள் சில அமைப்புகள் மூலம் எனக்கு எளிதாக கிடைத்துள்ளது. அவற்றை பயன்படுத்தி முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தப்படும். என்னை தடுக்க முயன்றால் தடுத்து கொள்ளுங்கள். ஆனால் தாக்குதல்கள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் கடிதம் வந்தபோது 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதனால் கடித விவரத்தை வெளியில் பகிரங்கப்படுத்தாமல் அவருக்கு தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

 

இந்த நிலையில் இ மெயிலில் குறிப்பிட்டபடி பிப்ரவரி 28-ந் தேதி எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், உளவு துறையினர் மற்றும் ஐ.பி. அதிகாரிகளும் பிரதமருக்கு வந்த அநாமதேய இ மெயில் குறித்து ரகசிய விசாரணை நடத்தினர்.

 

மேலும் அந்த இ மெயில் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது என்பது பற்றியும் சைபர் கிரைம் நிபுணர்கள் துணையுடன் ஆய்வு செய்து வருகிறார்கள். அதோடு தீவிரவாத அமைப்புகளையும் கண்காணித்து வருகிறார்கள்.

தற்போது பிரதமர் மோடிக்கு கூடுதல் மற்றும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 நாட்களுக்கு முன்புதான் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இதற்கான காரணத்தை வெளியிட்டனர். 2 மாதங்களுக்கு முன்பு பிரதமருக்கு வந்த இ மெயில் மிரட்டல் பற்றியம், அதில் குறிப்பிடப்பட்டவை குறித்த தகவல்களையும் அதிகாரிகள் வெளியிட்டனர். இதன்காரணமாகவே பிரதமருக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Malaimalar