ஜூலை முதல் 300 யூனிட் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வருகிறது- பஞ்சாப் அரசு

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப்பெற்று முதன்முறையாக ஆட்சி அமைத்தது. மொத்தமுள்ள 117 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 92 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி காங்கிரசை அடிபாதாளத்திற்கு தள்ளியது.

இதையடுத்து, பஞ்சாப் மாநில முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார். கடந்த மார்ச் 19-ம் தேதி அன்று தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தின்  முடிவில் மாநிலத்தின் பல்வேறு அரசு துறைகளில் காவல் துறை உள்பட 25000 பணியிடங்களை நிரப்பியது.

இதேபோல் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது.

அதன்படி, பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவு செய்துள்ள நிலையில் ஜூலை முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 

Malaimalar