அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைகிறது- 5 சதவீத வரியை 3 மற்றும் 8 சதவீதமாக மாற்ற முடிவு

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் நோக்கத்தில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தது.

அப்போது ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்வதற்காக சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. சில ஆடம்பர பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரை செஸ்வரி விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒப்பந்தம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் தங்கள் வரிவருவாயை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன.

மாநில அரசுகள் ஜி.எஸ்.டி இழப்பீடுகளுக்காக மத்திய அரசை சார்ந்து இருக்கக் கூடாது என்பதோடு மாநிலங்கள் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாநிலங்களில் வரி வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களை உருவாக்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாநில அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த குழுவினர் புதிய பரிந்துரைகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்த குழுவினர் தங்களது பரிந்துரைகளை அடுத்த மாதத்துக்குள் இறுதி செய்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையே ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதுதவிர தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மேலும் பிராபிட் அல்லாத பொருட்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத உணவு வகைகள் மற்றும் சில பொருட்களுக்கு தற்போது ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனி அந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக உணவு அல்லாத பொருட்கள் 3 சதவீத வரியின் கீழ் கொண்டு வரப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தற்போது 5 சதவீத வரியில் உள்ள சில அத்தியாவசிய பொருட்களை 3 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில் சில பொருட்களை 7 முதல் 9 சதவீத வரி வரம்புக்குள் உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 5 சதவீத வரியில் உள்ள பொருட்களுக்கு 1 சதவீதம் வரி அதிகரிக்கும் போது அரசுக்கு கூடுதலாக ரூ.50 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் தற்போது 5 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்கள் சிலவற்றை 8 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரவே ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிசீலித்து வருகிறது.

தற்போது சமையல் எண்ணெய், டீ, காபி, சர்க்கரை, நிலக்கரி, இந்திய இனிப்புகள், இன்சுலின் போன்ற உயிர் காக்கும் மருந்துகள், நடக்க உதவும் குச்சிகள், உபரி எரிபொருள், அகர் பத்திகள், முந்திரி பருப்பு ஆகியவை 5 சதவீத வரி வசூலிப்பில் உள்ள சில பொருட்கள் ஆகும்.

இவை 3 சதவீதத்துக்கோ அல்லது மாற்றப்பட உள்ளது. ஆனாலும் மத்திய, மாநில அரசுகளின் நிதி மந்திரிகள் கலந்துரையாடலுக்கு பிறகே ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி முடிவு எடுக்கும். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Malaimalar