அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது.

வேலூரில் ஏற்கனவே அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் நேற்று 103.2 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. அதேபோல் திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் வெயில் ஏற்கனவே 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியையும் தாண்டிவிடும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படும்.

அக்னி வெயில் காலகட்டத்தின்போது மே 11 முதல் 24-ந்தேதி வரை வெயில் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற நாட்களில் பகல் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் தர்பூசணி, இளநீர், மோர் உள்ளிட்ட பானங்களை பருகுவதன் மூலம் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

 

Malaimalar