மாவட்ட அளவில் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும்- மத்திய வர்த்தகத்துறை மந்திரி வலியுறுத்தல்

புதுதில்லியில் 21-ஆவது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுயசார்பு இந்தியா- ஏற்றுமதி மீதான கவனம் தொடர்பான நிகழ்ச்சியல் உரையாற்றிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்,  2030-ஆம் ஆண்டிற்குள் வணிகம் மற்றும் சேவைகள் ஏற்றுமதி தலா 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் திறனை இந்தியா கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக ஏற்றுமதியை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2021-ல் உலகளாவிய பொருட்கள் வர்த்தகத்தில் நமது பங்கு 3 சதவீதத்திற்கு கீழ் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தற்போது வளர்ச்சி அதிகமான வாய்ப்புள்ளது என்றார். இது நடப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்கள் அவரவர் மாவட்டங்களில் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மருந்துப் பொருட்கள் ஆய்வு கூட்டுறவு  திட்டத்தில் உறுப்பினராவதற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்றும்,  இதன்மூலம் நமது மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியை 200 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Malaimalar