தஞ்சை களிமேடு கிராமத்தில் தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இன்று பிற்பகலில் களிமேடு சென்றடைந்த அவர், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார். அதன்பின்னர், தேர் விபத்து நடந்த இடத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாராளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Malaimalar

























