பொருளாதார இழப்பை சமாளிக்க 12 ஆண்டுகள் தேவைப்படும்- ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கியது. இதனால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க 12 ஆண்டுகள் தேவைப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு ரிசர்வ் வங்கி முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி இழப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.52 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் இழப்புகளை சமாளிக்க 2034-35ம் ஆண்டு வரை ஆகும் என்று எதிர்பார்ப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டு 21ல் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமும் நிதியாண்டு 22ல் வளர்ச்சி விகிதம் 8.9 சதவீதமாகவும் இருக்கும் என்று யூகிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 23ல் 7.2 மற்றும் அதை தொடர்ந்து 7.5 சதவீதம் வளர்ச்சி விகிதமாக எடுத்துக் கொண்டால் 2034-35 நிதியாண்டில் தான் கொரோனா பாதிப்பு இழப்புகளை சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டு 21ல் ரூ,19.1 லட்சம் கோடியும், 22ல் ரூ.17.1 லட்சம் கோடியும், 23ல் ரூ.16.4 லட்சம் கோடியும் உற்பத்தி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி புத்துயிர் பெறும் புனரமைப்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வெளியிட்டு உள்ளது.

 

Malaimalar