ஜோத்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 97 பேர் கைது- ராஜஸ்தான் காவல்துறை

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.  இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதில், 4 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜோத்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.

ஜோத்பூரின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா ஆகிய போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு இடங்களில் இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஹவா சிங் குமாரியா கூறுகையில், ” ஜோத்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. உயர்மட்ட அதிகாரிகள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு சிறிய சம்பவமும் கண்காணிக்கப்படுகிறது. ஜோத்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மெத்தம் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து, ஜோத்பூர் வன்முறை குறித்து விசாரணை நடத்துமாறு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சதீஷ் பூனியா மேலும் கூறியதாவது:-

வன்முறை சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தை தானாக முன்வந்து மாநில அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும் என்று நான் உங்களை (ஆளுநர்) தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

Malaimalar