கேரளாவில் 5 நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு- சுகாதாரத்துறை மந்திரி தகவல்

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த வாரம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி தேவநந்தா பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா பார்சல் செய்து கொடுத்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்தது.

அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் குறித்து கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போதிய சுகாதார வசதிகள் இல்லாத ஓட்டல்கள் சீல் வைக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி மாநில சுகாதாரத்துறை மந்திரி வீனாஜார்ஜ் கூறியதாவது:

கேரளா முழுவதும் ஓட்டல்கள், அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதில் தரமான உணவு பொருட்கள் வழங்காத ஓட்டல்கள் சீல் வைக்கப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 110 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

347 ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.