நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) நிறுவன வெள்ளி விழா கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பங்குச் சந்தை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பங்குச் சந்தைக்கான ஏகலைவா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் பங்குச் சந்தை, நிதி ஆகியவை குறித்து அறிந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி அவர் விளக்கினார்.
ஏகலைவா திட்டம் மூலம் இந்தி மற்றும் மாநில மொழிகளில் பங்கு சந்தை குறித்து கற்றுக் கொள்ள முடியும் என்றும், இதனால் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பங்குச்சந்தையில் இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய பங்கு வகித்து உள்ளனர் என்றும், அந்நிய முதலீட்டாளர்கள் போலில்லாமல் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதை இவ்வுலகிற்கு காட்டியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்
சில்லறை முதலீட்டாளர்கள் சார்பில் 2019-20ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், 2020-21ல் ஆண்டில் அது மாதத்திற்கு 12 லட்சமாக மூன்று மடங்கு அதிகரித்து என்றும், நடப்பாண்டில் சுமார் 26 லட்சமாக அது அதிகரித்துள்ளது என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Malaimalar