வங்க கடலில் உருவானது ‘அசானி’ புயல்- தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான அளவில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான கால நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மிதமானது முதல் சூறாவளி காற்றுடன் கூடிய மழையும் பெய்தது.

திருச்சியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் சேதம் அடைந்தது.

இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு அசானி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும், தற்போது 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அசானி புயல் வட ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் மே 10-ந்தேதி கரையை கடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்தமான், தென்கிழக்கு, மத்திய கிழக்கு, வங்ககடல் பகுதிகளில் இன்றும், மத்திய வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளை முதல் 2 நாட்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசானி புயலால் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும் பாம்பன், ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாலும், புயலாக மாறுவதாலும், காரைக்கால், பாம்பன், நாகை, கடலூர் ஆகிய இடங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

 

Malaimalar