இந்திய கலாசாரப்படி பெண் வீட்டார் தங்களது உறவினர்கள் மற்றும் சமூக அளவில் மாப்பிள்ளை தேடி, பின்னர் இருவீட்டு பெரியவர்களும் பேசி, பெண் பார்க்கும் படலம் நடந்து, அழைப்பிதழ் அடிப்பது இப்படி பல சம்பிரதாயங்களுடன் திருமணம் நடக்கிறது. ஆனால் இப்படி பார்த்து, பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் சில பந்தங்கள் தோல்வியில் முடிகின்றன.
வரதட்சணை பிரச்சினை, மாமனார்-மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை, கணவர் கொடுமை இப்படி பல பிரச்சினைகளால் திருமண பந்தங்கள் பாதியில் முறிந்து போகின்றன.
இதில் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதில் இருந்து ஒருசில பெண்களே முறையாக விவாகரத்து பெற்று மறுமணம் புரிந்து நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆனால் ஏராளமான பெண்கள் தங்களுக்கு கிடைத்தது அவ்வளவுதான் என்று சகித்துக் கொண்டும், கொடுமைகளை அனுபவித்துக் கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த வகையில் பெண்களுக்கு அதிக கொடுமைகள், தொல்லைகள் கொடுப்பது பற்றி தேசிய குடும்ப நலத்துறை ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் இந்திய அளவில் பெண்களுக்கு அதிக கொடுமைகள், தொல்லைகள் கொடுப்பதில் கர்நாடக மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.
கர்நாடக மாநிலத்திற்கு எதிராக 48 சதவீதம் பேர் ஓட்டுப்போட்டு உள்ளனர். இதில் பீகார் மாநிலம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்திற்கு எதிராக 43 சதவீதம் பேர் ஓட்டுப்போட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு எந்தெந்த வகைகளில் பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது குறித்தும் தேசிய குடும்ப நலத்துறை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மனதளவிலும், உடல் அளவிலும், பாலியல் அளவிலும் அதிக தொல்லைகள் மற்றும் கொடுமைகள் கொடுப்பது கணவர்கள்தான். இதுதவிர சில கணவர்கள் வெளியுலகிற்கு நல்லவர்களாக இருந்தாலும் மனைவிகளிடம் மட்டும் சைக்கோ போல் நடந்து கொடுமைப்படுத்துவதும் உண்டு என்று கூறப்படுகிறது. மேலும் பெண்களின் நடத்தை மீது சந்தேகம் அடைந்தும், அவர்களை கடுமையாக விமர்சித்தும் தொல்லை கொடுக்கப்படுகிறது.
குடும்ப சண்டையை காரணம் காட்டி பெண்கள் தாக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இதில் காயம் அடையும் பெண்களை கணவரோ, அவரது குடும்பத்தினரோ காப்பாற்ற முன்வருவதும் இல்லை என்று தெரிகிறது.
இதில் கணவன்மார்கள் தங்களது மனைவிகளை கண் பகுதியில் தாக்குவதும், கை-கால்களை முறிப்பதும், கொடூரமாக தாக்குவதும் அதிகரித்து இருக்கிறது. பெண்கள் மீது தீவைக்கும் சம்பவங்களும் கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஏராளமான பெண்கள் குடும்ப பிரச்சினைகளை சகித்துக் கொண்டு சமூகத்தை மனதில் வைத்து தங்களுக்கான பிரச்சினைகளை வெளியே சொல்வதில்லையாம். 58 சதவீத பெண்கள் பிரச்சினைகளை சகித்துக் கொள்ள முடியாமல் தங்கள் பெற்றோர் வீடுகளுக்கு சென்று விடுகிறார்களாம்.
மேலும் 27 சதவீத பெண்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பிரச்சினைகளை கூறி தீர்த்துக் கொள்வதும், 9 சதவீத பெண்கள் சமூக அமைப்புகளின் உதவியை நாடுவதும், 2 சதவீத பெண்கள் தாங்களே தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான பெண்களே போலீஸ் மற்றும் கோர்ட்டுகளுக்கு சென்று புகார் அளிப்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
Malaimalar