தமிழகத்தில் தடுப்பூசியால் தான் கொரோனா 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது- ராதாகிருஷ்ணன் தகவல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு புனரமைக்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி புற நோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஊட்டி மலர் கண்காட்சியை காண்பதற்கான அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் தங்கள் சுய பாதுகாப்பை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

20 பேருக்கு மேல் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து கொள்வது உட்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். தாவரவியல் பூங்கா உள்பட பொது இடங்களில் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்றின் 2வது மற்றும் 3வது அலைகளை சமாளிக்க தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. இதில் 11.07 கோடி தடுப்பூசி போடப்பட்டதால் தான் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தக்காளி வைரஸ் காய்ச்சல் குறித்து பயப்பட தேவையில்லை. யாருக்காவது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பித்தாலே என்ன காய்ச்சல் என்பது தெரிந்து விடும்.

குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு தமிழக முதல்-அமைச்சரிடம் கூறி ரூ.5 கோடி நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். பழங்குடியினருக்கு வரும் சிக்கிள் செல் அனீமியா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற மரபு வழி நோய்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உறவு முறையில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும். மரபு வழி இல்லாதவர்களுக்கு பரிசோதனை மூலம் வராமல் தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Malaimalar