கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத பெரிய தொழிலதிபா்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்காத வங்கிகள், விவசாயிகளை மட்டும் துன்புறுத்துகின்றன என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த மோகன்லால் பாட்டீதாா் என்ற விவசாயி மகாராஷ்டிர வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தாா். அதனை ஒருமுறை கடன் தீா்வு (ஓடிஎஸ்) திட்டத்தின் கீழ் திருப்பிச் செலுத்த வங்கியை அணுகினாா்.
மோகன்லால் பெற்ற கடனை ஓடிஎஸ் திட்ட வரையறைகளின் கீழ் ரூ.36.50 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர வங்கி முதலில் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவா் ரூ.35 லட்சத்தை வங்கியில் செலுத்தியுள்ளாா். அதன் பின்னா், அவரை மீண்டும் தொடா்புகொண்ட வங்கி, கடனை முழுமையாகத் தீா்க்க ரூ.50.50 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மோகன்லான் பாட்டீதார் மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அவா் செலுத்திய தொகையை ஏற்றுக்கொள்ளுமாறு வங்கிக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர வங்கி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
பெரிய தொழிலதிபா்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால், அவா்களுக்கு எதிராக எந்த வங்கிகளும் வழக்குத் தொடுப்பதில்லை. ஆனால் விவசாயிகள் விவகாரத்தில் மட்டும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவா்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றன. மனுதாரா் 95 சதவீத தொகையை திருப்பி செலுத்தியுள்ளாா். அதனை வங்கியும் ஏற்றுள்ளது. மீண்டும் கூடுதல் தொகையை கட்டுமாறு அவரை துன்புறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. இதுதொடா்பான வழக்கில் மத்திய பிரதேச நீதிமன்றம் நியாயமான தீா்ப்பைத்தான் அளித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்து வங்கியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Malaimalar