திருப்பூரில் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடல்- 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி இன்று முதல் அடுத்த மாதம் ஜூன் 5-ந்தேதி வரை 15 நாட்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.

இதன் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களுக்கு இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே ஜவுளி உறத்தியாளர்கள் 50 சதவீதம் உற்பத்தி நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இருப்பினும் நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயராத காரணத்தால் இந்த 15 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.100 கோடி அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விசைத்தறிகளில் பணியாற்றும் 5 லட்சம் கூலி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

எனவே பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. நூல் விலை உயர காரணம் சீனாவில் மின்சார பற்றாக்குறை, நிலக்கரி பிரச்சனை ஆகியவற்றால் சர்வதேச நாடுகளுக்கு சீனாவின் துணி ரகங்கள் வருவதில்லை. அதனால் வியட்நாம், இந்தோனேசியா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பஞ்சு, நூல் போன்ற மூலப்பொருட்கள் ஏற்றுமதி யாகிறது. அதனால் நமது நாட்டில் எந்த விலை கொடுத்தாலும் உடனே நூல் கிடைப்பதில்லை.

முன் பணம் கட்டி ஆர்டர் செய்தால் தான் 10 நாட்கள் கடந்த பின்னர் நூல் கிடைக்கும் என்ற நிலை தற்போது நிலவுகிறது. இந்தியாவில் இருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யாமல் மதிப்புக்கூட்டு பொருட்களாக தயாரித்து அனுப்பினால் கூடுதலாக அன்னிய செலவாணி கிடைக்கும். தீபாவளி பண்டிகைக்கு முன்பு 20 கவுன்ட் 63 இஞ்ச் காடா துணி ஒரு மீட்டர் ரூ.50க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

நூல் விலை உயர்வுக்கு பின்னர் துணி உற்பத்தி அடக்க விலை ஒரு மீட்டர் ரூ.64 ஆகிறது. ஆனால் துணி மொத்த வியாபாரிகள் ரூ.58க்கு தான் கேட்கின்றனர். அதே போல் 55 இஞ்சு துணி அடக்க விலை ஒரு மீட்டர் ரூ.52 ஆகிறது. ஆனால் துணி மொத்த வியாபாரிகள் ரூ.47க்கு தான் கேட்கின்றனர். ஓ.இ.மில் உரிமையாளர்கள் விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் வகையில் கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு இருந்த நூல் விலையில் தற்போது விற்பனை செய்தால் ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க முடியும். அதற்கு ஆவணம் செய்திட வேண்டும். மத்திய அரசின் பஞ்சு சேமிப்பு கிடங்கில் இருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள பஞ்சை உள்நாட்டு தேவைக்கு மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். எப்போதும் உள்நாட்டு தேவை போக மீதம் ஆகும் உபரி பஞ்சு, நூல்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறி உள்ளனர்.

வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம், பல்லடம், தெக்கலூர், சாமளா புரம் மற்றும் கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சூலூர், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

 

 

Malaimalar