ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஜப்பானுக்கு வரும் போதெல்லாம் உங்களிடம் இருந்து அதீத அன்பைப் பெறுகிறேன். உங்களில் சிலர் பல ஆண்டுகளாக ஜப்பானில் தங்கியிருந்தாலும் இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றி உள்ளது.
வன்முறை, அராஜகம், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் என இன்று உலகம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களிலிருந்தும் மனித குலத்தைக் காப்பாற்றுவதற்கு புத்தர் காட்டிய பாதையில் உலகம் பயணிக்க வேண்டும். புத்தரின் ஆசீர்வாதத்தைப் பெறும் அளவுக்கு இந்தியா அதிர்ஷ்டசாலி.
கொரோனா தொற்று காலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நெருக்கடியான சமயத்திலும் இந்தியா உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உதவியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததும் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கும், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கியது.
இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது. இந்த திறனை வளர்ப்பதில் ஜப்பான் ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது. உலகில் நடக்கும் 40 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என தெரிவித்தார்.
Malaimalar