நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால், மீண்டும் பல மாநிலங்கள் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
எரிசக்தி, தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மின் உற்பத்திக்கு இந்தியா பெரும்பாலும் நிலக்கரியைத்தான் சார்ந்துள்ளது.
இந்நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, நுகர்வுக்கு ஏற்ற மின் உற்பத்தியை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றும் அதன் காரணமாக, பல மாநிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மின்சார ஆணையம் வரும் ஆகஸ்ட் மாதம் நாட்டின் அதிகபட்ச மின் தேவை 214 ஜிகாவாட்டாக இருக்கும் எனக் கணித்துள்ளதுடன், சராசரி மின் தேவையானது, கோடையின் உச்சமாக கருதப்படும் மே மாதத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், அச்சமயம் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுத்து, மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தென்மேற்குப் பருவமழையால் தடைபடக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பருவமழைக்கு முன்பே போதுமான நிலக்கரி கையிருப்பில் இருந்தால் மட்டுமே மின்வெட்டைச் சமாளிக்க இயலும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியதாக எரிசக்தி, தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுரங்கங்களில் இருந்து 1,500 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய முடியும்.
கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி 777.26 மெட்ரிக் டன்னாக இருந்தது என்றும் இது சுரங்கங்களின் உற்பத்தித் திறனில் பாதிதான் என்றும் அந்த ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுனில் தஹியா கூறுகிறார். எனவே, நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் நிலக்கரி சுரங்கங்களால் மட்டுமே அதன் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரியை உரிய நேரத்தில் அனுப்ப இயலவில்லை. இதனால் ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. அம்மாநிலங்கள் தொடர்ந்து பல நாள்களுக்கு இருளில் மூழ்கின.
இந்நிலையில், மீண்டும் அதேபோன்ற நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி, தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த ஒரு மாத காலத்துக்குள் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நிலைமையைச் சமாளிக்க இயலும் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நிலக்கரியை இறக்குமதி செய்ய மாநில அரசுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் தனித்தனியாக வெளிநாடுகளில் இருந்து இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோருவது குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு கருதுகிறது.
எனவே, மத்திய அரசு நிறுவனமான ‘கோல் இந்தியா’ நிறுவனமே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tamilmurasu