கிருஷ்ணகுமார் குன்னத் உடலில் காயங்கள் – விசாரணையைத் தொடங்கிய கொல்கத்தா போலீஸ்

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

மருத்துவமனைக்கு வந்த மாநில அமைச்சர் அருப் பிஸ்வாஸ், செய்தியாளர்களிடம் கே.கே-யின் மரணத்தை உறுதி செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மருத்துவர்கள், முதல்கட்ட கணிப்பின்படி, கே.கே. மாரடைப்பால் இறந்ததாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், மூல காரணத்தை அறிவதற்காக உடற்கூறாய்வுக்கு அவருடைய உடல் அனுப்பப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை இரவு ஒரு கல்லூரியில் நேரலை நிகழ்ச்சியின்போது கேகே-யின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அதனால் விடுதிக்குத் திரும்பியவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

‘முகம் மற்றும் தலையில் காயங்கள்’

கேகே, அழைத்துச் செல்லப்பட்ட தனியார் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் பேசும்போது, “அவருடைய முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் அவை விடுதி அறையில் கீழே விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். மேலும், அந்த அதிகாரி கேகே இரவு பத்து மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்”, என்றார்

அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் மும்பையில் இருந்து வரக் காத்திருக்கிறார்கள். அதன் பின்னர், அவருடைய உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இயற்கைக்கு மாறான மரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

 

BBC Tamil