இந்தியாவில் உள்ள 173 அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரிதான் ஆதாரமாக உள்ளது.
இந்த அனல்மின் நிலையங்களுக்காக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்நாட்டிலேயே நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இது 2020-21 ஆம் நிதியாண்டில் 21.5 கோடி டன்னாக குறைந்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20.9 கோடி டன்னாக மேலும் குறைந்துள்ளது.
அதே சமயம் இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் 71.6 கோடி டன்னாக இருந்த அகில இந்திய அளவிலான நிலக்கரி உற்பத்தி, 2021-22 ஆம் நிதியாண்டில் 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Malaimalar